கடந்த ஜுன் மாதம் 27ம் திகதி கிழக்கு மாகாணசபை உட்பட மூண்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டதையடுத்து. அரசியல் மாற்றம் குறித்த எதிர்பார்ப்புக்களுடனே ஒவ்வொரு இலங்கையரது சிந்தனைகளும் நகர்கின்றன. அதிலும் குறிப்பாக சிறுபாண்மை இனத்தவரது எதிர்பார்ப்புக்களும் அபிலாஷைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே புதிதாக உருவாகபோகும் மாகாண சபை தொடர்பாக காணப்படுகின்றது. எது எவ்வாறாயிருப்பினும் அதிகாரத்திலுள்ளவர்களது நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே யாவும் நடைபெறப்போகின்றது என்பதை நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னரான நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.
முதலில் மாகாண சபை முறைமை தொடர்பாக மக்கள் தெளிவான அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வது இத்தேர்தல் தொடர்பான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள அடிகோலாக அமையும். 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இலங்கை அரசியல் அமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தத்தினால் உருவாக்கப்பட்டதே இந்த மாகாண சபை முறைமையாகும். 1978ம் ஆண்டின் அரசியலைமைப்பு மிகவும் ஒற்றையாட்சித்தன்மை கொண்டிருந்தமை இலங்கையின் இனப்பிரச்சினை பூதாகரமாக வெளிப்படுவதற்கும், ஓர் ஆயுதப்போராட்டம் வெடிப்பதற்கும் அடிப்படையாக அமைந்தது. இதனடிப்படையில் இவ்வரசியலைப்பின் ஒற்றையாட்சித்தன்மையினை சற்றே ஜதாக்குவதற்கும், சிறுபாண்மையினரது சுயநிர்ணய கோஷத்தை தணிப்பதற்கும் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பெயரால் அரசியலமைப்புச்சட்ட வரையறைகளுக்குட்பட்டும் அரசியலைமைப்புச்சட்ட வரையறைகளை மீறியும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத்திருத்தமே 13வது அரசியலைமைப்புத்திருத்தச்சட்டமாகும் (இது கொண்டுவரப்பட்ட முறை பற்றி இந்தக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படவில்லை ஆனால் அது தொடர்பான ஆய்வு 13வது திருத்தச்சட்டத்pன் அரசியலமைப்புத்துவம் (constitutionalism) அற்ற தன்மையினை தெளிவுபடுத்தும்)
அரசியலைப்பிப்பின் 2வது உறுப்புரை ஒற்றையாட்சியை வலியுறுத்தி நிற்கின்றது அதன் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரங்களை பங்கீடு செய்வதனை உறுப்புரை 3 மற்றும் உறுப்புரை 4 என்பன தடை செய்கின்றன இவ்வாறானதொரு நிலைமையில் மாகாண ஆட்சி அலகு என்பது மத்திய அரசின் ஆணைகளை செயற்படுத்துவதற்கான ஓர் முகவர் உருவாக்கமே தவிர சுய ஆட்சி அல்லது அதிகாரப்பரம்பல் தொடர்பான ஓர் ஏற்பாடு அன்று. மேலும் மகாண சபையின் சட்ட வாக்க அதிகாரங்கள் பல்வேறு முறையில் கூறுபோடப்பட்டு மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதனை அரசியலைமப்பு நிபுணர்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். இதிலிருந்து மாகாண சபை முறைமையானது இலங்iகியலுள்ள சிறுபாண்மையினரது சுயநிர்யண கோரிக்கைகள் எதிலும் உள்ளடங்காது என்பதையும் இதை ஒரு இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றக்கொள்ள முடியாதென்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இலங்கையின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும்வரை 13வது திருத்தச்சட்டத்தை ஓர் தீர்வாக யாரும் எண்ணிப்பார்த்திராத நிலையில் ஆயுதப்போரட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு 13+ தீர்வுத்திட்டம், 13- தீர்வுத்திட்டம் என்று பெரும்பாண்மை அரசின் பேராதிக்கவாதத்தை நிலை நிறுத்தும் செயற்றிட்டம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தின் மூலமான மாகாண சபை உருவாக்கமும் இன்று அந்த மாகாண சபை முறைமையை ஓர் தீர்வுத்திட்டமாக திணிக்கும் மனப்பாங்கும் அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தையும் பேரிணவாதத்தின் முன்னே சிறுபாண்மையினர் ஒடுக்கப்படுவதையுமே காட்டி நிற்கின்றது. இன்னும் தெளிவாகச்சொல்லப்போனால் இந்த மாகாண சபை முறைமை என்பது ஒரு கரும்புத்தோட்டத்தை உரிமை கோருபவர்களிடம் இனிப்புத்துண்டொன்றை கொடுத்து “இதுதான் உங்களுக்குத்தீர்வு” என்ற சொல்வது போலாகும்.
இவை அனைத்தையும் தாண்டி ஏற்கனவே ஒரு முறை மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டவர்கள் ,மாகாண சபை முறைமையினூடாக சில அரசியல் அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் கிழக்குவாழ் சிறுபாண்மை இனத்தவர்களுக்கு நடைபெறவருக்கும் மாகாண சபைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். இத்தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியகளும் பற்பல வியூகங்களை அமைத்து வருகின்றன.
அதில் பிரதானமான ஓர் வியூகம் கிழக்கில் பெரும்பாண்மையாக இருக்கும் தமிழ் பேசும் மக்களது ஆணையை பெற்றக்கொள்வதற்கான முயற்சியாகும். இது தொடர்பாக பிரதான பங்கு வகிக்கக்கூடிய முஸ்லீம்கட்சிகளை வளைத்துப்போட அரசும் பிரதான தமிழ்க்கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியும் பல்வேறு பிரயத்தனங்களை செய்தன. இதற்காக அவர்கள் கையிலெடுத்துக்கொண்ட ஆயுதம் முஸ்லீம் முதலமைச்சர்.
கிழக்கில் தமிழர்களும் முஸ்லீம்களும் கிட்டத்தட்ட சமஅளவான வாக்குப்பலத்தை கொண்டிருந்தும் கிழக்கின் முதலமைச்சராய் எந்த இனத்தை சேர்ந்தவர் வர வேண்டும் என்பதிலே இழுபறிநிலை உருவாகியுள்ளது. இதையடுத்து முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம்களின் தேசியக்கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் பல்வேறு பேரம் பேசல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. முஸ்லீம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லீம் கட்சிகளான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் அகியன தத்தமது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை காளத்தில் இறங்கிருந்தன.
முஸ்லீம் காங்கிரஸின் தமிழர் விடுதலைக்கூட்டணியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போதே அஸ்தமனத்தை கண்ட வேளையில் தான் சார்ந்து நிற்கும் அரசுடனான பேரம் பேசலில் முஸ்லீம் காங்கிரஸ் இறங்கிவிட்டது இதற்கு அடிப்படைக்காரணம் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கைகோர்த்து செயற்படுமிடத்து அரசின் ஆதரவை இழக்கநேரிடும் அதே வேளை அரசின் கோபத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்ற பய உணர்வும், யுத்த காலங்களில் தமிழர்களின் பெயரால் முஸ்லீம் மக்களுக்கு புலிகள் செய்த மிகக்கொடூரமாக அராஜகங்காளால் உருவாக்கப்பட்ட கசப்புணர்வு இன்னும் களைப்படாத வேளையில் தமிழர்களுடன் கைகோர்ப்பது தொடர்பான நியாயங்களை முஸ்லீம் மக்களிடம் முன்வைக்க முடியாத நிலையுமாகும்.
அரசுடன் இணைந்து முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதற்கான ஏற்புடை தன்மையினை ஆராய்ந்து இவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார்களா என்பது கேள்விக்குரியதே, ஏனெனின் ஏற்கனவே இந்த மாகாணத்தின் முதலமைச்சராய் இருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் அரசுடனான சுமூக உறவை பேணிவரும் நிலையில் அரசு வேறொருத்தருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உதிக்கக்கூடியதே. அதே வேளை கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்னரே சிவனேசதுரைசந்திரகாந்தன் தான் வரப்போகும் மாகாண சபைத்தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறங்கப்போவதாக அறிவிருந்தார். இந்நிலையில் மாகாண சபை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவருடத்திற்கு முன்னர் அரசு கலைக்கத்திட்டமிடுகையில், வரப்போகும் மாகாணசபையில்; தனது பதவியை உறுதிப்படுத்தாமல் மாகாண சபையை கலைக்க அனுமதி வழங்கியிருப்பாரா என்ற கோள்விகளுக்கும் இங்கே விடைகாண வேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் ஏற்கனவே முதலமைச்சராய் இருந்த ஓர் சiபியல் ஓர் சாதாரண அமைச்சராகவே உறுப்பினராகவே தொடர்ந்து பதவிவகிக்க சிவனேசதுரை சந்திரகாந்தன் விரும்பவில்லை என்பது அவரது பல பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதொன்றாகும். ஆகவே அரசுடன் இணைந்து அவர் தேர்தலில் இறங்கும் போது அதற்கான ஏற்பாடுகளின்றி இறங்கியிருக்க மாட்டார் என்பதை இலகுவில் அனைவரும் புரிந்துகொள்வர்.
இது இவ்வாறிருக்க முஸ்லீம் முதலமைச்சர் ஒருவரை பெறுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடாத்திய முஸ்லீம் காங்கிரஸ் ஆசனங்கள் தொடர்பாக அதிக சிரத்தை எடுத்தமைதான் இறுதிக்கட்டம் வரை அரசுடனான பேச்சுவார்த்தைகள் நீண்டு செல்வதற்கான அடிப்படையாகும். அயினும் கூட அரசு தன் நிலையில் விடாப்பிடியாக நின்றமையும் அரசுக்குள் இருந்த ஏனைய முஸ்லீம் கட்சிகளின் வேறுபட்ட அபிலாஷைகளும் இறுதியாக முஸ்லீம் காங்கிரஸ் தனித்துக்கேட்பதென்ற முடிவுக்கு வழிவகுத்தது. ஆயினும் தனித்துக்கேட்கும் முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சி அமைத்திட அரசையோ அல்லது தமிழர் விடுதலை கூட்டணியையோ சார்ந்து நிற்க வேண்டிய நிலை உருவாகும் அப்போதும் கூட முஸ்லீம் முதலமைச்சரை அரசு வழங்க முன்வருவது கடினமானதே. தமிழர் விடுதலைக்கூட்டணியடன் இணைந்து முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியமைக்குமா என்பதும் கேள்விக்குரியதே.
முஸ்லீம் காங்கிரஸ் தவிர முஸ்லீம் முதலமைச்சர் தொடர்பாக பிரச்சாரங்களை மேற்கொண்டது அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸாகும். அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமீர் அலி சென்ற மாதம் நடைபெற்ற “சதுரங்கம்” தொலைக்காட்சி கலந்தரையாடலில் “சென்ற முறை முஸ்லீம் முதலமைச்சரை ஜனாதிபதியின் வேண்டுகோளிற்கிணங்க விட்டுக்கொடுத்தோம்; இம்முறை அனைத்து முஸ்லீம் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு முஸ்லீம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான அறைகூவலை முஸ்லீம் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்”எனக் கேட்டுக்கொண்டார் அந் நிகழ்ச்சியில் முஸ்லீம் காங்கிரஸைச்சேர்ந்த பாராளுமன்ற ஊறுப்பினர் ஹரீஸ் அவர்களும் பங்குபற்றியிருந்தார். ஆனால் இம்முறைதேர்தலில் முஸ்லீம் முதலமைச்சரை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித ஆதாரமும் இன்றி அரசுடன் இணைந்து போட்டியிட அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளமையானது… மீண்டும் ஓர் விட்டுக்கொடுப்பைச்செய்ய அக்கட்சி தயாராக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதே சமயம் வழக்கம்போல தேசிய காங்கிரஸ் தான் பலம் பெறுவதற்கும் பிரதேச அபிவிருத்திக்கும் ஏதுவான கோரிக்கைகளுடனே இத்தேர்தல் களத்தில் அரசுடன் கைகோர்த்துள்ளது. மொத்தத்தில் முஸ்லீம் முதலமைச்சர் தொடர்பாக பிரச்சார மேடைகளிலாவது பேசுவதற்கு அரசுடன் கூட்டுவைத்துள்ள முஸ்லீம் கட்சிகள் தயாராக இல்லை என்பத கண்கூடு.
முஸ்லீம்களின் தனித்துவத்தை பேண முஸ்லீம் காங்கிரஸ் தனித்தகேட்பதாயினும், அபிவிருத்தியை நோக்காக கொண்டு அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் அரசுடன் இணைந்து கேட்பதாயினும் அழுத்தங்கள் காரணமாக அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணைந்ததாகட்டும் ஒட்டுமொத்தத்தில் முஸ்லீம் முதலமைச்சர் கோஷம் கானவாகிப்போவதும் அரசின் திட்டமிடலு;க்கேற்ப இவ்வனைத்துக்கட்சிகளும் தேர்தலுக்குப்பின் செயற்படப்போவதும் திண்ணம்…..