தேசங்கள் தோற்றம் பெற்ற காலம் தொட்டே விதிமுறைகளின் தொகுப்பே ஆட்சியும் அதிகாரமுமாய் இருந்து வந்துள்ளது, இவ்விதிமுறைகளின் கோட்பாட்டு ரீதியான தொகுப்பையே சட்டம் எனக்காண்கின்றோம். சட்டத்தின் உருவாக்கம் மற்றும் அமுலாக்கம் என்பவற்றை பேணுவதற்கான அமைப்பு முறையே ஆட்சி மற்றும் அதிகாரம் கொண்ட அரசு. அரிஸ்டோட்டில் தொடக்கம் டய்சி வரைக்கும் சட்டத்தின் ஆட்சி பற்றி பல்வேறு கருத்தாக்கங்கள் உருப்பெற்றுள்ளன இவ்வாறான சட்டவாட்சி கருத்தாக்கங்களை நடைமுறைப்படுத்தவும், சட்டத்தினால் மக்கள் ஆளப்படுதனை உறுதிப்படுத்தவும் சட்டத்தpனால் மக்கள் எவ்வாறு ஆளப்படவேண்டும் என்பதை வரையறுக்கவும் உருவாக்கப்படும் அடிப்படைச்சட்ட முறையே அரசியலமைப்பாகும். இதை இன்னுமொரு வார்த்தையில் சொல்லப்போனால் சட்டங்களை உருவாக்குவதற்கும் அமுலாக்குவதற்குமான தாய்ச்சட்டம் எனக்கூறலாம்.
சட்டவாட்சி மற்றும் அன்றி சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்கான வலுவேறாக்க கோட்பாடுகளையும் மக்களது இறைமையையும் உறுதிப்படுத்துவற்கான ஓர் ஏற்பாடே அரசியலைப்புச்சட்டம் எனலாம் இவ்வாறு சட்டத்தின் முன் சமத்துவத்தை பேணுவதற்குரிய ஏற்பாடான அரசியலமைப்புச்சட்டம் வெறுமனே ஆட்சிக்கான அதிகாரங்கள் குவிந்த பொதியாக நோக்கப்படுவதே தற்கால நிலையாகும். ஆட்சிசெய்வதற்காய் அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புக்களும், அதிகாரம் செய்வதற்காகவே ஆட்சியை வழங்கும் அரசியலமைப்புக்களும் காலம் காலமாய் உலகவரலாற்றில் இடம்பிடித்துக்காணப்படுகிறது. இதே நோக்கில் இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பு எந்த வகையைச்சேர்ந்தது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1978ம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் பின் புலத்தை நோக்குமிடத்து இந்த யாப்பு உருவாக்கப்படும் போது ஆட்சியிலிருந்த ஜக்கிய தேசிய கட்சி, தேசிய அரசுப்பேரவையின் 5/6 பெரும்பாண்மையை கொண்டிருந்தது இவ்வாறு ஓர் பலம் பெருந்திய அரசு இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பிலிருந்த தவறுகள் காரணமாக தனது பிரதான அரசியல் எதிராளியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அடைந்த தோல்விகளை கருத்திற்கொண்டு தனக்கு அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற கரிசனையுடன் தனது ஆட்சியை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக உருவாக்கிய ஓர் அரசியலமைப்புச்சட்டமே இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பாகும்.
இவ் யாப்பு உருவாக்கப்பட்ட பிண்ணனியிலிருந்து நாம் விளக்கிக்கொள்ளக்கூடிய உன்மை யாதெனில் ஓர் அரசியலமைப்பை எந்த தடையகளுமின்றி சுயமான பெரும்பாண்மையுடன் உருவாக்ககூடிய ஓர் சூழ்நிலையில் ஓர் பலமான அரசை உருவாக்குவதற்காய் அதிகாரச்செறிவுடன் ஆக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பாகும்.
இரண்டாவது குடியரசு யாப்பின் முன்னுரையை சற்று கூர்ந்து கவனிப்போயமானால் அதில் தெளிவாக சொல்லப்பட்டுள்ள விடயம் யாதெனில் இலங்கை மக்கள் சுதந்திரமாக வழங்கிய ஆணையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் புதியதொரு குடியரசு யாப்பினை உருவாக்குவதற்கான தத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது, அத்தகைய ஆணையை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதியுயர்ந்த சட்டமாக இந்த யாப்பை வரைகிறோம். இவ்விரு வாக்கியங்களையும் நோக்கும் போது மக்களிடமிருந்த அதிகாரம் சுதந்திரமான முறையில் பிரதிநிதிகளிடம் கையளிக்கபட்டு அப்பிரதிநிதிகள் அவ்வதிகாரத்தை பிரயோகிக்கும் முகமாக வரையப்பட்ட யாப்பே இரண்டவது குடியரசு யாப்பு ஆகும். ஆகவே அதிகாரம் அதன் பிரயோகம் அகியனவே இம்முன்னுரையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை உலகின் சிறந்த குடியரசு யாப்புக்களாக கருதப்படும் தென் ஆபிரிக்க மற்றும் அமெரிக்க யாப்புக்களின் முன்னுரையை எடுத்து நோக்குவோமானால் 1996ம் ஆண்டில் வரையப்பட்ட தென்ஆபிரிக்க அரசியலமைப்பின் முன்னுரையில் “ தென்ஆபிரிக்க மக்களாகிய நாங்கள் கடந்து போன அநீதிகளை ஏற்றுக்கொண்டு, நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போரடியவர்களை கௌரவித்து, நாட்டை கட்டியெழுப்ப உழைத்தவர்களை மதித்து, தென்ஆபிரிக்கா அதில் வசிக்கும் அனைத்துப்பல்வகைமையான மக்களுக்கும் சொந்தம் என்று நம்பி, எங்கள் பிரதிநிதிகளினூடாக இந்த யாப்பினை அதியுயர் சட்டமாக ஏற்றுக்கொள்கிறோம் ” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தென் ஆபிரிக்க யாப்பு மக்களால் மக்களுக்காவே உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் யாப்பு என்பது தெளிவாகின்றது. தென் ஆபிரிக்க யாப்பு மட்டுமன்றி அமெரிக்க யாப்பின் முன்னுரையை எடுத்து நோக்குவோமானால் “ ஜக்கிய அமெரிக்க குடியரசின் மக்களாகிய நாங்கள் இன்னும் பூரணமானதும் சிறந்ததுமான ஒன்றியத்தை அமைப்பதற்கும், நீதியையும் உள்நாட்டு அமைதியையும் நிலைநாட்டுவதற்கும், பொதுவான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், தேசிய நலனையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும் உருவாக்கும் அரசியலமைப்பு இதுவாகும் ” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட மூண்று யாப்புக்களின் முன்னுரையை ஒப்பிட்டு நோக்குமிடத்து இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பினை தவிர ஏனைய தென்ஆபிரிக்க மற்றும் அமெரிக்க யாப்புக்கள் மக்களால் நேரடியாக உருவாக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதிகாரம் தொடர்பாக எந்த வாசகமும் இடம்பெறவில்லை ஆனால் இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பினை பொறுத்தவரை அதன் அடித்தளமே அதிகாரமெனும் பதத்தினால் உருவாக்கபட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
இரண்டாவது குடியரசு யாப்பின் முன்னுரையை தாண்டி அத்தியாயங்களுக்குள் நுழைவோமானால் முதவாவது அத்தியாயயத்தின் 4வது உறுப்புரை, மக்களது இறைமையை அரச துறைகளுக்குள் எவ்வாறு கூறுபோடுவது என்பதை தெளிவாக வரையறுக்கின்றது. உன்மையில் இறைமை என்னும் பதம் இன்னுமொரு அதிகாரத்தில் தங்கியிருக்காதததும் உடண்படாததையும் குறிப்பதாகும் ஆனால் உறுப்புரை 4இனை வரைந்தவர்கள் மக்களது இறைமை என்னும் பரந்துபட்ட பதத்தினை வெறுமனே அதிகாரங்கள் எனக்கருதி அவ்வதிகாரங்களை எவ்வாறு அரச துறைகள் பிரயோகிக்கப்போகின்றன என்பதில் மட்;டும் கரிசனை காட்டியுள்ளனர்.
உறுப்புரை 4 ற்கமைய மக்களது சட்டவாக்க அதிகாரம் பாரளுமன்றத்தினால் பிரயோகிக்கப்படும், நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படும், நீதித்துறை அதிகாரம் நீதிமன்றங்களாலும், தீர்ப்பாயங்களாலும் ஏனைய சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாலும் பிரயோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மக்கள் இறைமையை அரச துறைகளுக்கிடையில் எவ்வாறு கூறுபோடப்படல் வேண்டும் என்பதை விடுத்து ஆட்சிக்காக அரச துறைகளுக்கு ஏன் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் அது எவ்வாறு பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை.
இதே வேளை உறுப்புரை 4ற்கமைவாக மக்களது நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகிக்கும் உரித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது, அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களின் விளைவாக அரசியலைமைப்புச்சட்டத்தின் அடிப்படைக்குறிக்கோளான சட்டவாட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு உறுப்புரை 35 இனால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. உறுப்புரை 35 ன் பிரகாரம் ஜனாதிபதிக்கு எந்தவகையான நடவடிக்கையிலிருந்தும் முழுமையான குற்ற விலக்களிப்பை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவாட்சியின் அடிப்படைக்கோட்பாடான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தகர்த்து ஜனாதிபதி என்ற தனிமனிதரை சட்டத்திற்கு மேலோங்கிய அதிகாரமிக்கவராய் ஆக்கியுள்ளது. இது அதிகாரம் என்னும் தனிப்பதம் அரசியலமைப்பின் ஆணிவேரான சட்டவாட்சியையே ஆட்டம் காணச்செய்துள்ளது என்பதற்கு இன்னுமோர் உதாரணமாகும்.
இக்கட்டுரையில் ஏற்கனவே விபரித்தது போல் இத்தகைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஆட்சிசெய்வதற்கான அரசியலமைப்பு என்பதிலிருந்து மாற்றமடைந்து அதிகாரம் செலுத்தவதற்கான ஆட்சியை வழங்கும் அரசியலமைப்பு என்னும் தோற்றப்பாடை தருவிக்கின்றன.
இவ்வாறான உறுப்புரைகளுக்கு மேலதிகமாய் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத்திருத்தங்களும் மீண்டும் மீண்டும் அதிகாரத்தேடலையே தூண்டி நிற்கின்றன இதற்கு உதாரணங்களாக 13வது மற்றும் 18வது அரசியலமைப்புத்திருத்தங்களை குறிப்பிடலாம்.
13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பொறுத்தவரை மத்திய அரசிடம் காணப்பட்ட அபரிமிதமான அதிகாரங்களை மாகாண அரசுகளிடம் ஒப்படைத்து ஓர் பிராந்திய நிருவாகத்தை தோற்றுவிக்கும் ஓர் ஏற்பாடகும் இருந்த போதும் உறுப்புரை 154B ன் கீழ் உருவாக்கப்படும் ஆளுனர் என்னும் பதவிக்கான அதிகாரங்கள் மீண்டும் அதிகார மையப்படுத்தலை நோக்கியதான அரசியலமைப்பு வரைஞர்களின்; எண்ணங்களை பிரதிபலிக்கின்றது. இதற்கு உதாரணமாக உறுப்புரை 154H இனைக்குறிப்பிடலாம் 154H (1), (2) ற்கமைவாக மாகாணசபையால் உருவாக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றை ஆளுனரது ஓப்புதலுக்காக நியமிக்கப்படும் போது அத்தகைய சட்ட மூலத்தை ஓப்புதலளிக்கவே, திருத்தத்திற்காக மீண்டும் மாகாணசபைக்க திருப்பி அனுப்பவே ஆளுனருக்கு அதிகாரம் உண்டு . இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் சட்ட மூலம் மீண்டும் ஆளுனரிடமே ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இத்தகைய ஓர் ஏற்பாடானது சட்டவாக்க அதிகாரங்களை மாகாணசபைகள் கொண்டிருந்தும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஓர் தனிமனிதரிடம் அவ்வதிகாரங்களை அடகுவைத்திருக்கும் ஓர் நிலைக்கு தள்ளியள்ளது.
மேற்குறித்த உதாரணம் உட்பட பல்வேறு இடங்களில் அதிகாரங்கள் நிறுவனமயப்படுத்தப்படாமல் தனிநபர் ஒருவரிடமோ அல்லது நிறுவனத்திடமோ கையளிக்கப்பட்டிருப்பது இலங்கையின் இரண்டாவது குடியரசுயாப்பு அதிகார மையப்படுத்தல் சார்பான சித்தாந்தத்தை கொண்டிருப்பதை தெளிவுபடுத்துகின்றது
இதே வேளை சுயாதீனமான அரச செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் முகமாக அரசியலமைப்பின் 17ம் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்றக்குழு என்ற அமைப்பிடம் அனைத்துவகையான அரச நிருவாக அதிகாரங்களும் மீளக்கையளிக்கப்பட்டிருப்பதனூடாக அரச இயந்திரத்தின் அதிகாரத்திற்கான தேடலும் அதற்கு உறுதுணையாக இரண்டாம் குடியரசுயாப்பின் உறுப்புரைகள் அமைந்துகாணப்படுவதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
தேசமொன்றின் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு உறுதியான அரசு மட்டுமன்றி அவ்வரசு தமது கடமைகளை நிறைவேற்றக்கூடிய அதிகார தத்துவங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதே நல்லாட்சிக்கான சித்தாந்தமாகும். இதே வேளை அரசின் அதிகாரங்கள் மக்கள் ஆணையூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்படுவதே குடியரசு அமைபின் வழிமுறையாகும். இத்தகைய வழிமுறைகளை பினபற்றியொழுக உருவாக்கப்படும் ஆவணமே அரசியலமைப்பு, இது தேசத்திற்கு தேசம் மாறுபடும் குணாதிசங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு தேசத்தின் தன்மை, ஆளப்படும் மக்களின் பல்வகைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு அரசியலமைப்பும் தனக்கேயான தனித்துவத்தை கொண்டுள்ளது ஆதலால் ஓர் அரசியலமைப்பு இவ்வாறுதான் காணப்படவேண்டும் என்று எந்தவித இறுக்கமான கோட்பாடுகளையும் உருவாக்குதல் கடினமானதாகும்.
ஆனாலும் காலம் காலமாய் சமூகவியலாளர்களாலும், அரசியல் தத்துவவியலாளர்களாலும் உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான சித்தாந்தங்களை ஒவ்வொரு அரசியலமைப்பும் கொண்டிருப்பது ஓர் அத்தியாவசியமான தேவைப்பாடாகும். அத்தகைய அரசியல் சிந்தாந்தங்களான சட்டவாட்சி, வலுவேறாக்கம், இறைமை என்பவற்றை உள்வாங்கிய அரசியலமைப்புகளையே சிறந்த அரசியல்யாப்புக்கள் எனக்கூறுகின்றோம் இதுவே அரசியலமைப்புத்துவமுமாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒவ்வொரு அரசியலமைப்பும் தத்தமது தேவைக்கேற்றாற்போல் அதிகார மையப்படுத்தல் கொள்கையையோ அல்லது அதிகாரபரவலாக்க கொள்கையையோ தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. எது எவ்வாறாயினும் ஓர் ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பானது மக்களால் வழங்கப்பட்ட அதிகாரங்களை மக்களது தேவைக்கேற்றவாறு மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்.
இதைத்தான் ஆட்சிசெய்வதற்கான அதிகாரமென்று இக்கட்டுரையின் ஆரம்பபகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைவிடுத்து அதிகாரங்களை கையளித்து அதனாலான ஆட்சியை எதிர்பார்க்கும் அரசியலமைப்புச்சித்தாந்தமானது எவ்வாறு ஓர் ஜனநாயக குடியரசின் மக்கள் தேவையை பூர்த்திசெய்யும் என்பது கேள்விக்குரியதே.
இலங்கையின் இரண்டாவது ஜனநாயக சோஷலிச குடியரசு யாப்பினை பொறுத்தவரை அபரிமிதமான அதிகாரத்தேடலை தூண்டக்கூடிய ஏற்பாடுகள் காணப்படுவதனை இக்கட்டுரையில் ஏற்கனவே ஆரயப்பட்ட உதாரணங்களைக்கொண்டு விளங்கிக்கொள்ள முடியும். அதிகாரங்கள் நிறுவனமயப்படுத்தப்படாது ஏதோ ஓர் தனிநபரிடமே அல்லது ஓர் தனி நிறுவகத்திடமே குவிந்து காணப்படுவது இரண்டாவது குடியரசு யாப்பின் இயல்புகளில் ஒன்றாக காணப்படுகிறது. இது இலங்கையில் இன்னும் அரசியலமைப்புப்பரினாம வளர்ச்சி இடம்பெறவேண்டும் என்பதை வலியுறத்துகின்றது. கோல்புறூக் யாப்புத் தொடக்கம் இரண்டாவது குடியரசு யாப்புவரை முழுமையான அரசியலமைப்புத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய யாப்புக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆதலால் எதிர்காலத்தில் அதிகாரத்தை மையப்படுத்தாது நல்லாட்சியை மையப்படுத்தும் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தேவைப்பாடாகும்.
No comments:
Post a Comment